சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
895   அத்திப்பட்டு திருப்புகழ் ( - வாரியார் # 905 )  

கருகி அறிவு அகல

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதனன தனதனன தத்தத் தத்ததன
     தனதனன தனதனன தத்தத் தத்ததன
          தனதனன தனதனன தத்தத் தத்ததன ...... தனதான

கருகியறி வகலவுயிர் விட்டுக் கிக்கிளைஞர்
     கதறியழ விரவுபறை முட்டக் கொட்டியிட
          கனகமணி சிவிகையில மர்த்திக் கட்டையினி ...... லிடைபோடாக்
கரமலர்கொ டரிசியினை யிட்டுச் சித்ரமிகு
     கலையைபுரி செய்துமறைகள் பற்றப் பற்றுகனல்
          கணகணென எரியவுடல் சுட்டுக் கக்ஷியவர் ...... வழியேபோய்
மருவுபுனல் முழுகிமனை புக்குத் துக்கமறு
     மனிதர்தமை யுறவுநிலை சுட்டுச் சுட்டியுற
          மகிழ்வுசெய்து அழுதுபட வைத்தத் துட்டன்மதன் ...... மலராலே
மயல்விளைய அரிவையர்கள் கைப்பட் டெய்த்துமிக
     மனமழியு மடிமையைநி னைத்துச் சொர்க்கபதி
          வழியையிது வழியெனவு ரைத்துப் பொற்கழல்கள் ...... தருவாயே
பொருவின்மலை யரையனருள் பச்சைச் சித்ரமயில்
     புரமெரிய இரணியத னுக்கைப் பற்றியியல்
          புதியமுடு கரியதவ முற்றுக் கச்சியினி ...... லுறமேவும்
புகழ்வனிதை தருபுதல்வ பத்துக் கொத்துமுடி
     புயமிருப தறவுமெய்த சக்ரக் கைக்கடவுள்
          பொறியரவின் மிசைதுயிலு சுத்தப் பச்சைமுகில் ...... மருகோனே
அரியமர கதமயிலி லுற்றுக் கத்துகட
     லதுசுவற அசுரர்கிளை கெட்டுக் கட்டையற
          அமரர்பதி யினியகுடி வைத்தற் குற்றமிகு ...... மிளையோனே
அருணமணி வெயில்பரவு பத்துத் திக்குமிகு
     மழகுபொதி மதர்மகுட தத்தித் தத்திவளர்
          அணியகய லுகளும்வயல் அத்திப் பட்டிலுறை ...... பெருமாளே.
Easy Version:
கருகி அறிவு அகல உயிர் விட்டு உக்கிக் கிளைஞர் கதறி
அழ
விரவு பறை முட்டக் கொட்டி இட கனக மணி சிவிகையில்
அமர்த்திக் கட்டையினில் இடை போடா
கர மலர் கொடு அரிசியினை இட்டுச் சித்ர மிகு கலையை
உரி செய்து
மறைகள் பற்றப் பற்று கனல் கண கண என எரிய உடல்
சுட்டு
கக்ஷியவர் வழியே போய் மருவு புனல் முழுகி மனை புக்குத்
துக்கம் அறு
மனிதர் தமை உறவு நிலை சுட்டுச் சுட்டி உற மகிழ்வு செய்து
அழுது பட வைத்து
அத் துட்டன் மதன் மலராலே மயல் விளைய அரிவையர்கள்
கைப்பட்டு எய்த்து மிக மனம் அழியும் அடிமையை
நினைத்து
சொர்க்க பதி வழியை இது வழி என உரைத்துப் பொன்
கழல்கள் தருவாயே
பொருவு இல் மலை அரையன் அருள் பச்சைச் சித்ர மயில்
புரம் எரிய இரணிய தனுக் கைப் பற்றி
இயல் புதிய முடுகு அரிய தவம் உற்றுக் கச்சியினில் உற
மேவும் புகழ் வனிதை தரு புதல்வ
பத்துக் கொத்து முடி புயம் இருபது அறவும் எய்த சக்ரக் கைக்
கடவுள் பொறி அரவின் மிசை துயிலு(ம்) சுத்தப் பச்சை
முகில் மருகோனே
அரிய மரகத மயிலில் உற்றுக் கத்து கடல் அது சுவற அசுரர்
கிளை கெட்டுக் கட்டை அற
அமரர் பதி இனிய குடி வைத்தற்கு உற்ற மிகு இளையோனே
அருண மணி வெயில் பரவு பத்துத் திக்கும் மிகும் அழகு
பொதி மதர் மகுட
தத்தித் தத்தி வளர் அணிய கயல் உகளும் வயல்
அத்திப்பட்டில் உறை பெருமாளே.
Add (additional) Audio/Video Link

கருகி அறிவு அகல உயிர் விட்டு உக்கிக் கிளைஞர் கதறி
அழ
... உடல் கருகித் தீய்ந்தது போல் ஆகி, அறிவும் நீங்கி, உயிர்
பிரிந்தவுடன் சுற்றத்தார் உள்ளம் நைந்து கதறி அழ,
விரவு பறை முட்டக் கொட்டி இட கனக மணி சிவிகையில்
அமர்த்திக் கட்டையினில் இடை போடா
... (இழவு வீட்டுக்கு)
வந்து சேர்ந்த பறைகள் யாவும் சப்திக்க, பொன்னும் மணியும் துலங்கும்
பல்லக்கில் அமர்த்தி, விறகுக் கட்டைகளின் நடுவில் போடப்பட்டு,
கர மலர் கொடு அரிசியினை இட்டுச் சித்ர மிகு கலையை
உரி செய்து
... உறவினர்களின் மலரன்ன கைகளால் வாய்க்கு
அரிசியிடப்பட்டு, அழகுள்ள மேல்துணியும் விலக்கப்பட்டு,
மறைகள் பற்றப் பற்று கனல் கண கண என எரிய உடல்
சுட்டு
... உடலின் மறைவான இடங்களிலும் பிடிக்கின்ற நெருப்பு
பற்றிக்கொண்டு கண கண என்று எரிய, உடல் இவ்வாறு சுடப்பட்டு,
கக்ஷியவர் வழியே போய் மருவு புனல் முழுகி மனை புக்குத்
துக்கம் அறு
... பக்கத்தில் இருந்தவர்கள் தாம் வந்த வழியே திரும்பிப்
போய் நன்றாக நீரில் குளித்து, வீட்டுக்குப் போய் துக்கம் நீங்கினர்.
மனிதர் தமை உறவு நிலை சுட்டுச் சுட்டி உற மகிழ்வு செய்து
அழுது பட வைத்து
... மனிதர்களை இன்ன உறவு இவர் என்று உறவின்
முறையைக் குறித்து அத்தகைய குறிப்பால் மகிழ்ச்சி பூணவும்,
அழுதிடவும் (என்னை) வைத்து,
அத் துட்டன் மதன் மலராலே மயல் விளைய அரிவையர்கள்
கைப்பட்டு எய்த்து மிக மனம் அழியும் அடிமையை
நினைத்து
... அந்தத் துஷ்டனாகிய மன்மதனுடைய மலர் அம்பால், காம
உணர்ச்சி உண்டாக, பெண்கள் கையில் அகப்பட்டு இளைத்து, மிகவும்
மனம் நொந்து அழிகின்ற அடிமையாகிய என்னை நீ நினைத்து,
சொர்க்க பதி வழியை இது வழி என உரைத்துப் பொன்
கழல்கள் தருவாயே
... உன் பாதங்களாகிய பொன் உலகுக்குப்
போகும் வழியை இதுதான் வழி என்று சொல்லிக் காட்டி, உனது அழகிய
திருவடியைத் தந்தருளுக.
பொருவு இல் மலை அரையன் அருள் பச்சைச் சித்ர மயில்
புரம் எரிய இரணிய தனுக் கைப் பற்றி
... நிகர் இல்லாத பர்வத
அரசன் (இமவான்) பெற்ற பச்சைநிற அழகு மயில், திரி புரம் எரி பட
பொன் வில்லைத் தன் கையில் பற்றியவள்,
இயல் புதிய முடுகு அரிய தவம் உற்றுக் கச்சியினில் உற
மேவும் புகழ் வனிதை தரு புதல்வ
... இடைவிடாத அன்புடன்
அதிசயமான வகையில் ஊக்கத்துடன், அருமையான தவத்தை மேற்
கொண்டு காஞ்சிப் பதியில் பொருந்தி விளங்கும் புகழ் பெற்ற தேவி
பார்வதி பெற்ற மகனே,
பத்துக் கொத்து முடி புயம் இருபது அறவும் எய்த சக்ரக் கைக்
கடவுள் பொறி அரவின் மிசை துயிலு(ம்) சுத்தப் பச்சை
முகில் மருகோனே
... (ராவணனின்) பத்துக் கொத்தான தலைகளும்,
இருபது புயங்களும் அற்று விழ அம்பைச் செலுத்தியவனும், சக்ராயுதத்தை
ஏந்தியவனுமாகிய கடவுள், புள்ளிகளைக் கொண்ட ஆதிசேஷன்
என்னும் பாம்பின் மேல் பள்ளி கொள்ளும் சுத்தமான பச்சை நிற மேக
வண்ணனாகிய திருமாலின் மருகனே,
அரிய மரகத மயிலில் உற்றுக் கத்து கடல் அது சுவற அசுரர்
கிளை கெட்டுக் கட்டை அற
... அருமையான மரகதப் பச்சை
நிறமான மயில் மீது வீற்றிருந்து, ஒலிக்கும் கடல் வற்றும்படி,
அசுரர்களின் கூட்டம் கட்டோடு ஒழிய,
அமரர் பதி இனிய குடி வைத்தற்கு உற்ற மிகு இளையோனே ...
தேவர்கள் தலைவனான இந்திரன் சுகத்துடன் குடி ஏறுதற்கு தக்கபடி
ஏற்பாடு செய்த, மிக்க இளையவனே.
அருண மணி வெயில் பரவு பத்துத் திக்கும் மிகும் அழகு
பொதி மதர் மகுட
... செம்மணிகள் பத்துத் திக்குகளிலும் ஒளி வீசும்,
மிக்க அழகு நிறைந்து செழிப்புடன் விளங்கும் கிரீட மணி முடியை
உடையவனே,
தத்தித் தத்தி வளர் அணிய கயல் உகளும் வயல்
அத்திப்பட்டில் உறை பெருமாளே.
... தாவித் தாவி வளர்கின்ற
வரிசையாக உள்ள கயல் மீன்கள் குதிக்கும் வயல்கள் உள்ள
அத்திப்பட்டில் வீற்றிருக்கும் பெருமாளே.

Similar songs:

895 - கருகி அறிவு அகல (அத்திப்பட்டு)

தனதனன தனதனன தத்தத் தத்ததன
     தனதனன தனதனன தத்தத் தத்ததன
          தனதனன தனதனன தத்தத் தத்ததன ...... தனதான

Songs from this thalam அத்திப்பட்டு

895 - கருகி அறிவு அகல

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song